பணம் வந்த கதை பகுதி - 4: நாணயம் வந்தது, வட்டியும் வந்தது...டும் டும் டும்!

வ்வொரு நூறு நாணயத்திற்கும் ஐந்து நாணயங்கள் சேவைக் கட்டணம் என்பது சிறிய தொகையாகத் தெரிந்ததாலும் வேறு மாற்று வழி எதுவும் இல்லாததாலும் ஊர் மக்கள் அனைவரும் இதற்கு ஒப்புக் கொண்டார்கள். அதிகப்படியான அந்த ஐந்து நாணயங்களை அய்யாவு ‘சேவைக் கட்டணம்’ என்று அறிமுகப்படுத்தினாலும், அதன் உண்மையான பெயர் ‘வட்டி’!

"நாணயங்கள் தேவைப்படுபவர்கள் அனைவரும் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை என் கடைக்கு வாருங்கள். உங்களுக்கான நாணயங்களை நான் தயார் செய்து வைக்கிறேன்." என்று கூறி ஊர் மக்களை அனுப்பி வைத்தான் அய்யாவு.

அதன் பிறகு அய்யாவு சிறிதும் நேரத்தை வீணாக்கவில்லை. எத்தனை நாள் கனவு இது! இவ்வளவு சுளுவாக எல்லோரும் ஒப்புக் கொண்டு விட்டார்களே? இரவும் பகலுமாக உழைத்து அந்த வார முடிவில் தேவையான அளவு நாணயங்களைத் தயாரித்து முடித்து விட்டான்.
குறிப்பிட்ட தினத்தன்று ரேசன் கடை வரிசையைப் போல அய்யாவுவின் கடைக்கு முன் வரிசையில் நின்றார்கள் மக்கள். நிர்வாக சபை அதிகாரிகள் ஒவ்வொரு நாணயத்தையும் பரிசோதித்து ஒப்புதல் வழங்கிய பிறகு வினியோகம் தொடங்கியது. ஒவ்வொருவரும் அவரவர் தேவைக்கேற்ப நாணயங்களைப் பெற்றுச் சென்றனர். எல்லா கணக்கையும் ஒரு பேரேட்டில் பதிந்துக் கொண்டு பொற்காசுகளை வாரி வாரி வழங்கிக் கொண்டிருந்தான் அய்யாவு.

வெகு விரைவிலேயே மக்கள் ‘நாணய முறை’க்கு பழகி விட்டனர். எல்லா பொருட்களும் நாணய அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டது. ஒரு பொருளைத் தயாரிக்க தேவைப்படும் நேரத்தைக் கொண்டு பெரும்பாலும் அதன் ‘விலை’ நிர்ணயம் செய்யப்பட்டது. தயாரிப்பு நேரம் அதிகமானதாக இருந்தால் அதிக விலை! குறைவான நேரமே போதும் என்றால் குறைவான விலை!

கடிகாரங்கள் தயாரிப்பது குமாருவின் தொழில். அந்த ஊரில் அவன் ஒருவன் மட்டுமே கடிகாரங்கள் தயாரித்துக் கொண்டிருந்ததாலும் அவை தரமானதாக இருந்ததாலும் அவனது கடிகாரங்களை அதிக விலை கொடுத்து வாங்க மக்கள் தயாராக இருந்தனர். Monopoly என்பார்களே, அதுதான்.

ஆனால் அவனது சந்தோஷம் அதிக நாள் நீடிக்கவில்லை. வெளியூரிலிருந்து வினை அவனைத் தேடி வந்தது. வேறு ஒரு பிரதேசத்திலிருந்து அந்த ஊருக்கு பிழைப்பை நாடி வந்த பாலாவும் கடிகாரங்கள் தயாரிக்கத் தொடங்கினான். சந்தையில் போட்டி இருந்ததால் வாடிக்கையாளர்களைக் கவருவதற்காக அவன் குமாருவின் கடிகாரங்களைவிட குறைவான விலைக்கு விற்க ஆரம்பித்தான். குமாருவும் தன் கடிகாரத்தின் தரத்தை அதிகரித்து விலையையும் குறைக்க வேண்டியதாகி விட்டது. இருவருக்குமிடையில் தோன்றிய இந்தப் போட்டியினால் விரைவிலேயே கடிகாரங்களின் தரம் மேலும் அதிகரித்து விலையையும் மலிவாகி விட்டது. ஆரோக்கியமான இந்தப் போட்டியை மக்கள் சுவாரஸ்யமாக அவதானித்துக் கொண்டிருந்தனர்.

கொத்தனார்கள், வண்டி ஓட்டுபவர்கள், விவசாயிகள் என எல்லா தொழில்களிலும் இது போன்ற போட்டிகள் ஏற்பட்டு விலைகள் குறைந்தன. குறைந்த விலையில் தரமான பொருள்களைத் தெரிவு செய்து வாங்கும் வாய்ப்பு வாடிக்கையாளர்களுக்குக் கிடைத்தது. தவிர, உரிமம், வரி என எந்தத் தடங்கலும் இல்லாததால் யார் வேண்டுமானாலும் எந்தத் தொழில் வேண்டுமானாலும் தொடங்க முடிந்தது. வாடிக்கையாளர்களின் தேவைகளை நிறைவு செய்யும் தொழில்கள் அனைத்தும் நன்கு வளர்ச்சி பெற்றன. மக்களின் வாழ்க்கைத் தரமும் உயர்ந்தது. நாணயம், பணம் என்பனவெல்லாம் மக்களின் அன்றாட வாழ்வோடு இரண்டறக் கலந்து விட்டன. அதோடு வட்டியும்தான்!

(தொடரும்)

நன்றி: இந்நேரம்.காம்

கருத்துகள்