The Chitpore Road, Calcutta - 1867 |
ஓராண்டு
உருண்டோடிப் போனது. ‘பண’ப் பரிவர்த்தனைக்கு மக்கள் வெகுவாக பழகி
விட்டார்கள். அய்யாவுக்கு தன்னுடைய விளைச்சலை அறுவடை செய்யும் ஆசை வந்தது.
ஒரு இனிய மாலைப் பொழுதில் பேரேட்டுப் புத்தகத்தை எடுத்து கட்கத்தில்
இடுக்கிக் கொண்டு புறப்பட்டான். அவனிடம் கடனாக நாணயங்களைப் பெற்றுச்
சென்றவர்கள் ஆண்டு முடிவில் 100 நாணயங்களுக்கு 5 அதிகப்படியான நாணயங்களை
சேர்த்துத் திருப்பித்தர வேண்டும் என்பதுதானே ஒப்பந்தம்?
முதலில் பலகார வியாபாரி. பணப்புழக்கம்
ஏற்பட்ட பிறகு அவனது அன்றாட நடைமுறை வெகுவாக மாறி விட்டது. பலகாரங்களை
கூடையில் வைத்துக் கொண்டு சந்தையில் நின்று கூவிக்கூவி விற்ற காலம் மலையேறி
விட்டது. அய்யாவுவிடம் பெற்ற நாணயங்களைக் கொண்டு பலகாரங்கள் செய்வதற்கான
மூலப் பொருள்களை எளிதாக வாங்க முடிந்தது. வாடிக்கையாளர்களும் நாணயங்களை
கொடுத்து அவனிடம் பலகாரங்கள் வாங்கினார்கள். விரைவிலேயே அவன் கூடையை தூக்கி
எறிந்து விட்டு ஒரு கடை திறந்தான்.
அய்யாவு பலகார வியாபாரியைத் தேடி வந்த
போது அவனிடம் 100-க்கும் அதிகமான நாணயங்கள் இருந்தன. நூறோடு ஐந்து சேர்த்து
திருப்பிக் கொடுத்து அவனால் கடனை அடைத்துவிட முடியும். ஆனால், நாளைய
கொள்முதலுக்கு நாணயங்கள் தேவைப்படுமே? ‘கவலை வேண்டாம். இந்த ஆண்டிற்கான
சேவைக்கட்டணமான ஐந்து நாணயங்களை மட்டும் கொடுத்து விட்டு அந்த நூறையும்
இன்னும் ஓராண்டிற்கு நீயே வைத்துக் கொள்’ என்றான் அய்யாவு. ‘குட் ஐடியா’ என
ஐந்து நாணயங்களை மட்டும் அவனிடம் கொடுத்து அனுப்பி விட்டு சந்தோஷமாக தனது
வியாபாரத்தில் மூழ்கிப் போனான் வியாபாரி.
விவசாயியின் நிலை கொஞ்சம் மோசம்.
விளைச்சல் நெல்லைக் கொடுத்து தன் குடும்பத்திற்குத் தேவையான பொருள்களை
பண்டமாற்று முறையில் பெற்றுக்கொண்டிருந்த அவர், இனி அவ்வாறு செய்ய
முடியாது. பணம் கொடுத்தால்தான் பொருள் கிடைக்கும். எனவே அய்யாவுவிடம் பெற்ற
நாணயங்களைக் கொண்டு அவர் குடும்பத்தேவைகளை நிறைவேற்றிக் கொண்டிருந்தார்.
அறுவடைக் காலம் வந்ததும் நெல்லை விற்று மீண்டும் நாணயங்களை சம்பாதித்துக்
கொள்ளலாம் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது.
அறுவடைக்குப் பிறகு சந்தைக்குப் போனபோது
அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. யாரோ ஒரு வியாபாரி வெளியூரிலிருந்து
வண்டி வண்டியாக அரிசியைக் கொண்டு குறைந்த விலைக்கு விற்றுக்
கொண்டிருந்தான். விவசாயிக்கு அவர் எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை.
அய்யாவு அவரைத் தேடி வந்தபோது கையிருப்பைக் கணக்குப் பார்த்ததில் அவரிடம்
நூறுக்கும் குறைவாகவே நாணயங்கள் இருந்தன. அவருக்காக ‘உச்சு’க் கொட்டிய
அய்யாவு, தனக்கான சேவைக்கட்டணம் ஐந்து நாணயங்களை மட்டும் பெற்றுக் கொண்டு,
முன்பு கொடுத்த நூறு நாணயங்கள் மீண்டும் இன்னொரு ஆண்டிற்கு கடனாக கொடுக்கப்
பட்டதாக கணக்கு எழுதிக் கொண்டான்.
இப்படியாக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவங்கள். சிலர் கடனை முழுமையாகத் திருப்பிக் கொடுத்தார்கள். வேறு சிலர் கடனை அடைத்து விட்டு உடனே அதே அளவு அல்லது அதற்கும் கூடுதலான எண்ணிக்கையில் நாணயங்களை அடுத்த ஆண்டிற்காக கடன் வாங்கினார்கள். ஆனால் மிகப்பலர் மேற்கண்ட விவசாயியின் நிலையில் இருந்தார்கள். அவ்வாறு கடனைத் திருப்பிச் செலுத்த முடியாதவர்களிடம் அடமானமாக ஏதேனும் ஒரு பொருளை பெற்றுக் கொண்டு அவர்களுக்கான தவணைக் காலத்தை நீட்டித்துக் கொடுத்தான் அய்யாவு. அந்த ஆண்டில் அம்மக்களின் உழைப்பு, உற்பத்தி, செலவினங்கள் எல்லாமே எப்போதும் போல எந்த மாற்றங்களும் இல்லாமல் இருக்க, தம்மில் சிலர் ஏன் கடனாளிகளாகிப் போனார்கள் என்பது யாருக்கும் புரியவில்லை.
இந்த இடத்தில் ஒரு சின்ன மனக்கணக்கு போடுவோமா? (‘கணக்குன்னாலே எனக்கு
கால்குலேட்டரோ, கம்ப்யூட்டரோ வேணும்’ங்கிறவங்க அதை எடுத்துக்குங்க) அய்யாவு
முதலில் நூறு பேருக்கு ஆளுக்கு நூறு நாணயங்கள் கடனாக கொடுத்ததாக வைத்துக்
கொண்டால், அவன் வினியோகித்திருப்பது 100 x 100 மொத்தம் 10,000 நாணயங்கள்.
ஆண்டு முடிவில் கடனாளிகள் நூறு பேரும் ஆளுக்கு ஐந்து நாணயங்கள் சேர்த்துக்
கொடுக்க வேண்டுமென்றால் 100 x 5 = 500. ஆண்டு முடிவில் எல்லோருமே கடனையும்
கட்டணத்தையும் திருப்பிச் செலுத்துவதாக இருந்தால் மொத்தம் 10,500 நாணயங்கள்
தேவைப்படும். அய்யாவு வினியோகம் செய்தது மொத்தம் 10,000 நாணயங்கள்தானே?
அவன் தனது குடும்பச் செலவுகளுக்காக 100 நாணயங்களை செலவு செய்ததாக வைத்துக்
கொண்டாலும், அந்த ஊர் முழுக்க புழக்கத்தில் இருக்கும் மொத்த நாணயங்களின்
எண்ணிக்கை 10,100 மட்டுமே. மீதி 400 நாணயங்கள் எங்கிருந்து வரும்?
கருத்துகள்