அய்யாவுவின்
 கதையைச் சொல்லிக் கொண்டே வந்த சேது, ‘அய்யாவுவிடம் கடன் பெற்றிருந்தவர்கள்
 அவனுக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய அதிகப்படியான 400 நாணயங்கள் 
எங்கிருந்து வரும்?’ என்ற கேள்வியுடன் நிறுத்தினார்.
சபையில் சிறிது நேரம் மௌனம். “என்னங்க.. 
இப்படி ஒரு சஸ்பென்ஸ்ல கொண்டு வந்து நிறுத்திட்டீங்களே?” என்றார் அதியமான்.
 “அதானே.. மீதி 400 நாணயங்கள் எங்கிருந்து வரும்?” என்றார் பிரகாசம்.
“பையில இருந்தாத்தானே கையில வரும்? அந்த 
ஊர் முழுக்க புழக்கத்தில் இருக்கும் மொத்த நாணயங்களே 10100 தான் . 
வெளியிலிருந்தும் நாணயங்கள் வர வழியில்லை என்பதால் அதிகப்படியான 400 
நாணயங்கள் வர வாய்ப்பே கிடையாது” என்றார் சேது.
“அப்படின்னா, அய்யாவுக்கு கிடைக்கப் போவது அல்வாதானா? இதை யோசனை பண்ணாமலா அவன் மாஸ்டர் பிளான் போட்டான்?” என்றார் அருள்.
“அய்யாவு அதி புத்திசாலி. இதையெல்லாம் 
அவன் யோசிக்காமல் இல்லை. ஊர் மக்கள் அத்தனை பேரும் ஒரே நேரத்தில் கடனை 
அடைக்க முன் வரும்போதுதான் இந்த சிக்கல் வரும். அது நடக்கப் போவதில்லை. 
தவிர, நூற்றுக்கு ஐந்து நாணயங்களை அதிகப்படியாக பெறுவது மட்டும் 
அய்யாவுவின் நோக்கமல்ல. சமூகத்தில் பெரும் செல்வாக்கு மிக்கவனாக ஆக 
வேண்டும் என்பதுதான் அவனுடைய கனவு. அது நிறைவேற வேண்டுமென்றால் ஊர் 
மக்களில் பெரும்பகுதியினர் கடனை அடைக்க முடியாத நிலையில் இருக்க வேண்டும்.”
“அதெப்படி?”
“பலகாரக் கடைக்காரன் 105 நாணயங்களை 
திருப்பிக் கொடுத்து கணக்குத் தீர்த்துக் கொண்டான். அவன் மீண்டும் 100 
நாணயங்களை கடனாக வாங்கவில்லை என்றால் அய்யாவுக்கு அவன் கொடுக்க வேண்டியது 
வேறு எதுவும் இருந்திருக்காது. ஆனால் விவசாயியின் நிலையைப் பாருங்கள். 
முதலில் வாங்கிய கடனை திரும்பச் செலுத்த முடியவில்லை என்பதால் அவரது குடுமி
 அய்யாவுவின் கையில். அவரைப் போன்றவர்களிடம்தான் அவன் அடமானப் 
பொருள்களையும் பெற முடியும். இதைத்தான் அய்யாவு எதிர்பார்த்தான்.”
“’கதைதானே’ என்று சும்மா அடிச்சு வுடாதீங்க சேது! இப்படியெல்லாமா ஒருத்தன் திட்டம் போடுவான்?” என்றார் அருள்.
“இது வரைக்கும் நான் சொன்னது கதையா 
இருக்கலாம். ஆனா நிஜமா நடந்த ஒரு வரலாற்றை சொல்றேன். அத கேட்ட பிறகு 
நீங்களே முடிவு செஞ்சுக்கோங்க இப்படியெல்லாம் நடக்குமா நடக்காதா என்று” 
என்றார் சேது.
“தென்னமெரிக்காவில் பசிபிக் பெருங்கடலின் 
கரையில் அமைந்திருக்கும் ஒரு குட்டி நாடு ஈக்வடோர். இயற்கை வளம் கொழிக்கும்
 பிரதேசம். அமேசான் காட்டின் ஒரு சிறு பகுதி ஈக்வடோரின் நிலப்பரப்பில் 
பெரும்பகுதியை ஆக்ரமித்துள்ளது. கிழக்கில் அமேசான் காடு, மேற்கில் பசிபிக் 
பெருங்கடல், இடையில் பனிமலைகளையும் எரிமலைகளையும் கொண்ட மலைத்தொடர் என 
எல்லாவகை அம்சங்களையும் ஒருங்கே பெற்ற ஒரு வித்தியாசமான பூமி ஈக்வடோர். 
தேசத்தைப் போலவே அங்கு வசிக்கும் மக்களிலும் பழங்குடியினர், இலத்தீன் 
அமெரிக்கர்கள், ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளாக வந்தவர்களின் 
வம்சாவளியினர் என பலதரப்பட்டவர்.
“ம்..”
“1960களின் இறுதி வரை பண்ணை விவசாயத்தையே 
பெருமளவில் நம்பி இருந்த நாடு அது. 1968-ல் அமெரிக்க எண்ணை நிறுவனம் ஒன்று,
 ஈக்வடோரின் அமேசான் வனப்பகுதியில் பெட்ரோலியம் புதைந்திருப்பதை கண்டு 
பிடித்தது. அன்றிலிருந்து தொடங்கியது ஈக்வடோருக்குச் சோதனை! “
“அப்படி என்னய்யா சோதனை, எண்ணைக்காக முழு உலகமே ஆலாய்ப் பறந்துட்டிருக்குறப்போ?”
 “உண்மைதான். ஆனால் இன்றைக்கு எண்ணை வளம் கொண்ட நாடுகள் சந்திக்கும் 
பிரச்னைகளைப் பார்த்தால் ‘எங்களிடம் என்ன வளம் வேண்டுமானாலும் 
இருக்கட்டும், எண்ணை வளம் மட்டும் வேண்டவே வேண்டாம்’ என்று கூட அந்நாட்டு 
மக்கள் சொல்லும் சூழ்நிலை உருவாகியிருக்கிறதே? இதற்கு ஈக்வடோர் மட்டும் 
விதிவிலக்கா என்ன?” என்ற சேது மேலும் தொடர்ந்தார். 

கருத்துகள்